19/03/2025
வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 04
ஏன் விவசாயம்?
கடந்த வருடம் நான் விவசாயம் செய்யலாமென்று துவங்கியபோது, எல்லோரும் கேட்ட கேள்வி… உனக்கு ஏன் இந்த வேலை?
உறவினர்கள், நண்பர்கள் துவங்கி ஊர்க்காரர்கள் வரை இதையேத்தான் கேட்டார்கள். விவசாயம் ஏன் செய்யக்கூடாது அல்லது முடியாது என்பதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள்…
1. வேலை ஆட்கள் கிடைக்க மாட்டார்கள்.
2. இயற்கை துணை நிற்காது. (மழை பொழிந்து கெடுக்கும் அல்லது காய்ந்து கெடுக்கும்)
3. செலவு அதிகம். போட்டதை எடுக்க முடியாது.
4. வெயிலிலும், மழையிலும் கிடக்கவேண்டும். அதற்கு பதிலாக அலுவலகத்தில் நிம்மதியாக இருக்கலாம்.
5. தினமும் வேலை இருக்கும். இதெல்லாம் உனக்கு ஒத்து வராது.
அவர்கள் அனுபவத்திலிருந்து சொன்னது அத்தனையும் உண்மைதான். ஆனால், சிக்கல் இல்லாத, கடின உழைப்பு தேவைப்படாத வேலை என்று ஏதேனும் இருக்கிறதா?
விவசாயத்தை வேலை என்றோ… லாபம் தரும் தொழில் என்றோ பார்க்காமல், நம்மிடைய தேவைக்கு, சௌகரியத்திற்கு, அத்தியாவசியமானதாக கருதினால், மேலே சொன்ன அத்துனை இடர்பாடுகளையும் தாண்டி வந்துவிடலாம் அல்லது சமாளித்து விடலாம்.
என்னைப் பொருத்தவரை விவசாயம் என்பது ஒரு வகை சௌகரியம். என் தேவை. என் அத்தியாவசியம்.
நாம் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கிறோம், அவற்றிலிருந்து வருமானம் வருவதில்லை, அதற்கு பதிலாக பல்வேறு பயன்களை அது கொடுக்கிறது. பயணத்தை இலகுவாக்கிறது. அது ஒருவித சௌகரியம் அல்லவா? அதுப்போலத்தான் விவசாயமும்… நம்முடைய சௌகரியம்.
அதிலும் இயற்கை விவசாயம் மேலும் பல சிக்கல்களை கொண்டது. கடின உழைப்பை கோருபவையாக இருக்கிறது, என்றாலும் இதை செய்திட எனக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. அது… ‘நஞ்சில்லா உணவு’.
இரசாயன உரங்களால் கொஞ்சம் கொஞ்சமாக நாம் விஷத்தை உட்கொண்டு வருகிறோம், அது பல்வேறு நோய்களுக்கு காரணமாக இருக்கிறது என்று பல வருடங்களாக விபரம் தெரிந்தவர்கள், ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். இதையெல்லாம் நாம் தெரிந்துக்கொண்டே வேறுவழியில்லை(..!?) என்று கடந்து போகிறோம்.
விஷமென்று தெரிந்தாலும், தொடர்ந்து இரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கு காரணம், அதிக அளவு மகசூல்(பயன்) எடுப்பதற்குதான். எல்லோரும் செய்கிறார்கள், அதனால் நானும் செய்கிறேன் என்பது ஒவ்வொருத்தரும் சொல்லும் காரணம். எல்லோரும் செய்வதனால், அது தவறில்லை என்ற எண்ணம் பொதுபுத்தியில் படிந்து கிடக்கிறது.
எந்த விடயத்திலும், ‘பெரும்பான்மையோரின் முடிவு’ என்பதனாலேயே… அது சரியாகத்தான் இருக்கும் என்று நம்ப வேண்டியதில்லை.
பல ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கைக்கு செவி கொடுத்து… என்னால் ஆன முயற்சியாய் இந்த இயற்கை விவசாய முன்னெடுப்பு.
எனக்கான உணவை(முடிந்ததை) நானே உற்பத்தி செய்துக்கொள்ளும் முயற்சி இது. காய்கறிகள், அரிசி, பருப்பு, பழங்கள் போன்றவை உற்பத்தி செய்துக்கொள்வது சாத்தியம்தான். இனி ஒவ்வொன்றாய் முயன்று பார்த்திட வேண்டியதுதான்.
முன்பின் தெரியாத வியபாரி விற்பதை வாங்கி தின்பதை விட, இது எவ்வளவோ பாதுகாப்பானது. தின்பண்டங்களை கடையில் வாங்கி தின்னாதே, வீட்டில் செய்து சாப்பிடு என்பார்களே, அதைப்போல…
இரசாயனத்தால் விஷமாக்கிடாத உணவு இது. என் தேவைக்கு போக… மீதமுள்ளதை நண்பர்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன். பல நண்பர்கள் ஆர்வமாக, நம்பிக்கையாக வாங்கிக் கொள்கிறார்கள்.
எனக்கு வாய்ப்பிருப்பதனால் விவசாயத்தை முயற்சிக்கிறேன். வாய்ப்பில்லா நண்பர்கள் துணை நிற்கிறார்கள். தகவல் தெரிந்ததும் ஆர்வமாக தொடர்பு கொண்டு பேசும் பல நண்பர்களால்… ஒருவித மகிழ்ச்சியும், மனநிறைவும் உண்டாகிறது.
இயற்கையாக விளைவித்த ‘தூயமல்லி, பொன்னி அரிசி’ கையிருப்பில் இருக்கிறது. ஆர்வமும், தேவையும் கொண்ட நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்.
விவசாயம் சிக்கல்களை நாங்கள் எப்படி எதிர்கொண்டு சமாளித்தோம் என்பதைப்பற்றி தொடர்ந்து எழுதுகிறேன்.
எங்களுடைய சமூகவலைத்தள லிங்கிகள்:
YouTube: https://www.youtube.com/
Instagram: https://www.instagram.com/aruvadaifarm?igsh=NGY1NG9jOWExc3Ex&utm_source=qr
Facebook: https://www.facebook.com/profile.php?id=61566874415090&mibextid=LQQJ4d
#இயற்கைவிவசாயம் #விவசாயம் #விஜய்ஆம்ஸ்ட்ராங்
"Join our organic farming !